This translation may not reflect the changes made since 2008-12-09 in the English original.

Please see the Translations README for information on maintaining translations of this article.

கட்டற்ற மென்பொருள் - விளக்கம்

ஒரு மென்பொருளின் நிரலானது கட்டற்ற மென்பொருளாக கருதப் படத் தேவையான அம்சங்கள் குறித்த உண்மையினைத் தெளிவாக உணர்த்தும் பொருட்டு நாங்கள் கட்டற்ற மென்பொருளுக்கான இவ்விளக்கத்தின் மீது உரிமைக் கொள்கிறோம்.

“கட்டற்ற மென்பொருள்” என்பது விலையினை அடிப்படையாகக் கொள்ளாமல் சுதந்தரத்தினை அடிப்படையாகக் கொண்டது. இதனை“இலவசமாகக்” கருதாமல் “சுதந்தரமாக” தாங்கள் கருத வேண்டும்.

இது மென்பொருளை பயன்படுத்தும் ஒருவருக்கு அம் மென்பொருளை இயக்க, படியெடுக்க, விநியோகிக்க, கற்க, மாற்றியமைத்து மேம்படுத்தக் கூடிய உரிமைகளைப் பற்றியது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமாயின் மென்பொருளொன்றைப் பயன்படுத்தும் பயனொருவருக்கு அதன் மீதுள்ள நான்கு வகையான சுதந்தரத்தைப் பற்றியது:

  • எப்பொருட்டும் நிரலினை இயக்கக் கூடிய சுதந்தரம். (முதலாவது சுதந்தரம்).
  • நிரல் பணியாற்றும் விதத்தைக் கற்று தமது தேவைக்கேற்றாற் போல் ஆக்கிக் கொள்ளக் கூடியச் சுதந்தரம். (இரண்டாவது சுதந்தரம்). முதற்கண் நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
  • பிறரும் பயனுற வேண்டி படி யெடுத்து விநியோகிப்பதற்கான சுதந்தரம். (மூன்றாவது சுதந்தரம்)
  • ஒட்டுமொத்த சமூகமும் பயனுற வேண்டி, நிரலினை மேம்படுத்தி, செய்த மாற்றங்களைப் பொது மக்களுக்கு வெளியிடுவதற்கான சுதந்தரம். முதற்கண் நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப் பட்டிருத்தல் வேண்டும். (நான்காவது சுதந்தரம்)

இச்சுதந்தரங்கள் அனைத்தையும் பயனரொருவருக்குத் தரவல்ல மென்பொருள் கட்டற்ற மென்பொருள் ஆகும். ஆக, மென்பொருளின் படியினை மாற்றியோ மாற்றாமலோ, இலவசமாகவோ அல்லது விலைக்கோ எவருக்கும் எங்கேயும் விநியோகிக்கக் கூடிய சுதந்தரம் தங்களுக்கு வழங்கப் பட்டிருத்தல் வேண்டும். மற்றவைக்கு மத்தியில் இச் செயல்களை புரியத் தங்களுக்குச் சுதந்தரம் வழங்கப் பட்டிருக்கிறதென்றால் இதன் பொருட்டு எந்தவொரு அனுமதி பெறவோ அல்லது விலையினைத் தரவோ அவசியம் இல்லையென்று பொருள்.

மென்பொருளினை இயக்கக் கூடிய சுதந்தரம் என்றால், மென்பொருளினை உருவாக்குபவருக்கோ அல்லது எந்த ஒரு அமைப்பிற்கோ தெரியப்படுத்தாது, எத்தகையதொரு முழுமையானப் பணிக்காகவோ அல்லது நோக்கத்திற்காகவோ, தனிமனிதரொருவரோ அல்லது ஒரு நிறுவனமோ எத்தகையதொரு கணினியின் மீதும் பயன்படுத்தக் கூடிய சுதந்தரமாகும். “பயனரின்” நோக்கம் பூர்த்தியாவதே இவ்விடத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகின்றது.“உருவாக்குபவரது” நோக்கம் அல்ல. தங்களின் நோக்கங்களுக்காக நிரலொன்றினை இயக்கும் சுதந்தரத்தினை நீங்கள் பெறுகிறீர்கள். மற்றொருவருக்கு தாங்கள் அதனை விநியோகிக்க நேர்ந்தால் அதனை தனது நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் சுதந்தரத்தினை அவர் பெறுகிறார். ஆனால் தங்களின் நோக்கங்களை அவர் மீது சுமத்தும் அருகதைத் தங்களுக்கு இல்லை.

இங்ஙனம் நடக்கிறது என யாருக்கும் குறிப்பிடாமல் மென்பொருளினை மாற்றியமைத்து தனிப்பட்ட முறையில் பணி நிமித்தமாகவோ அல்லது விளையாட்டாகவோ பயன்படுத்தக் கூடிய சுதந்தரமும் தங்களுக்கு வழங்கப் பட்டிருத்தல் வேண்டும். ஒருகால் தாங்கள் செய்த மாற்றங்களை வெளியிட நேர்ந்தால் அது குறித்து குறிப்பிட்ட யாருக்கும் அறிவிக்க வேண்டிய அவசியம் எவ்வகையிலும் இருத்தல் கூடாது.

படிகளை விநியோகிக்கக் கூடிய சுதந்தரம் என்கிற போது, நிரல்களின் அப்படிகள் இரும அல்லது நிறுவும் நிலையிலும் மூல வடிவிலும் இருத்தல் வேண்டும். இது மாற்றப் பட்ட மற்றும் மாற்றப் படாத படிகளுக்கும் பொருந்தும். (கட்டற்ற இயக்கு தளங்களை வசதியாக நிறுவும் பொருட்டு விநியோகிக்கப்படும் நிரல்கள் இயக்க வல்லதான நிலையில் இருத்தல் அவசியம்.) விதிவிலக்கான தருணங்களில் இரும அல்லது நிறுவும் நிலையிலல்லாத நிரல்கள் (சில நிரலாக்க மொழிகள் அங்ஙனம் நிரல்களைத் தர இயலாத காரணத்தால்) ஏற்கப் படலாம். ஆனால் ஒருகால் அத்தகையதொரு வழிமுறையினை தாங்கள் கண்டறிந்தால் அவ்வடிவத்தில் மறுவிநியோகம் செய்யும் சுதந்தரத்தினைக் கட்டாயம் தாங்கள் பெற்றிருத்தல் வேண்டும்.

மாற்றுவதற்கான சுதந்தரம் மற்றும் மேம்படுத்துவதற்கானச் சுதந்தரம் என்பது பொருள்பட வேண்டுமாயின் மூல நிரல்களை அணுகும் உரிமையினைத் தாங்கள் பெற்றிருத்தல் வேண்டும். ஆக மூல நிரல்களை அணுகக் கூடிய உரிமையைப் பெற்றிருப்பதே கட்டற்ற மென்பொருள் என்பதன் இன்றியமையாத அம்சமாகும்.

கிடைக்கக் கூடிய துணை நிரல்கள் மற்றும் பாகங்களோடு நிரலொன்றினை இணைப்பது அதனை மாற்றுவதற்கான ஒரு முக்கியமான வழிமுறையாகும். ஒரு பாகத்தின் பதிப்புரிமைப் பெற்றவராக தாங்கள் இருந்தால் மாத்திரமே, அப்பாகத்தோடு நிரலினை இணைக்கக் கூடும் என்று தாங்கள் பயன்படுத்தும் நிரலின் உரிமம் பகன்றால் அந்நிரலின் உரிமம் கட்டற்றதாகும் தகுதியினை இழக்கிறது.

இச்சுதந்தரங்கள் நிதர்சனமாய் இருக்கவேண்டுமாயின், தாங்கள் பெரியதொரு குற்றத்தினைப் புரியாத வரையில், இவை திரும்பப் பெற முடியாததாய் இருத்தல் வேண்டும். ஆதாரமானக் காரணங்களுக்கு தாங்கள் ஏதும் செய்திடாத நிலையில், ஒரு மென்பொருளுக்கான உரிமத்தினை அதனை உருவாக்கியவர் திரும்பப் பெற இயலுமாயின் அம்மென்பொருள் கட்டற்ற மென்பொருள் ஆகாது.

அடிப்படையான சுதந்தரங்களோடு முரண்படாத பட்சத்தில் கட்டற்ற மென்பொருளை விநியோகிக்க மேற்கொள்ளப் படும் சில வழிமுறைகளுக்கான விதிகள் ஏற்கக் கூடியதே. உதாரணத்திற்கு காபிலெப்ஃட். இவ்விதியானது நிரலினை மறுவிநியோகம் செய்யும் போது, அடிப்படை சுதந்தரங்களுக்கு பங்கம் நேரும் வண்ணம், பிறரின் மீது ஒருவர் கட்டுக்களை சுமத்த இயலாது எனக் கூறுகிறது. இவ்விதி அடிப்படை சுதந்தரங்களைப் பாதுகாக்கிறதே ஒழிய அவற்றோடு முரண்படவில்லை.

குனு திட்டத்தில் இச்சுதந்தரங்களை அனைவருக்காகவும் பாதுகாக்கும் பொருட்டு நாங்கள் “காபிலெப்ஃட்” பயன்படுத்துகிறோம். காபிலெப்ஃட் செய்யப் படாத கட்டற்ற மென்பொருட்களும் உள்ளன. காபிலெப்ஃட் பயன்படுத்தப் படுவதற்கான அத்தியாவசிய காரணங்களை திடமாக நம்புகின்ற அதேவேளையில், தங்களின் மென்பொருள் காபிலெப்ஃட் செய்யப்படாததாக இருந்தாலும் கூட பயன்படுத்தப் படுவதில் குறையொன்றுமில்லை.“கட்டற்ற மென்பொருள்”, “காபிலெப்ஃட் மென்பொருள்” மற்றும் இதர வகையான மென்பொருட்கள் மற்றும் அவற்றுக்கிடையேயான தொடர்புகளைப் பற்றி அறிய கட்டற்ற மென்பொருட்களின் வகைகளை காணுங்கள்.

“கட்டற்ற மென்பொருள்” என்பதால் “வர்த்தகத்துக்கானது அல்ல” என்பது பொருளல்ல. ஒரு கட்டற்ற மென்பொருள் என்பது வர்த்தகத்துக்கு ஏதுவாய், வர்த்தக ரீதியில் உருவாக்கப் பட வல்லதாய், வர்த்தரீதியில் விநியோகிக்கப் படத் தக்கதாகவும் இருத்தல் அவசியம். தற்காலத்தில் வர்த்தக ரீதியான கட்டற்ற மென்பொருள் உருவாக்கம் என்பதொன்றும் விதிவிலக்கானதல்ல. இத்தகைய வர்த்தக ரீதியான மென்பொருட்கள் மிகவும் முக்கியமானதும் கூட.தாங்கள் கட்டற்ற மென்பொருட்களை விலைக்கோ அல்லது இலவசமாகவோ பெற்றிருக்கலாம். எம்முறையில் அதனைத் தாங்கள் பெற்றீர்கள் என்பதைச் சாராது அதனைப் படியெடுக்கவும், மாற்றவும் மட்டுமல்லாது விலைக்கு விற்கவும் தங்களுக்குச் சுதந்தரம் உண்டு.

மாற்றப் பட்ட வகைகளை வெளியிடுவது, தனிப்பட்ட முறையில் மாற்றப் பட்ட வகைகளை ஆக்கி பயன்படுத்துவது உள்ளிட்ட சுதந்தரங்களைத் தடுக்காத வரையில், மாற்றப்பட்ட மென்பொருளின் மூலமொன்றினை பொதியாக்குவது குறித்த நெறிமுறைகள் ஏற்கத் தக்கதே. இதே வழிகளுக்கிணங்க, “தாங்கள் ஒரு மென்பொருளை ஒருவகைப் பட்டதாக ஆக்கினால் அதனை வெளியிடும் போது குறிப்பிட்ட நெறிகளை சார்ந்து நிற்க வேண்டும்” போன்ற நெறிமுறைகளும் ஏற்கத் தக்கதே. (இந்நெறி மாற்றப் பட்ட மென்பொருளை வெளியிட வேண்டுமா என்பதைத் தேர்வு செய்யும் உரிமையைத் தங்களுக்கு வழங்குகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.)

சிலத் தருணங்களில் அரசாங்கத்தின் ஏற்றுமதிக் கொள்கைகள் மற்றும் வர்த்தக உரிமங்கள் முதலியன தாங்கள் மென்பொருட்களை உலக அளவில் விநியோகிக்கும் சுதந்தரத்தினைக் கட்டுப் படுத்தலாம். மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு இக்கட்டுப்பாடுகளை மீற ஆற்றல் இல்லாது இருக்கலாம். இத்தகையச் சட்டங்களை மென்பொருளினைப் பயன்படுத்த போடப்படும் நிபந்தனைகளாக ஏற்க இவர்கள் மறுக்க வேண்டும். இதன் மூலம் இவ்வரசாங்கங்களின் அதிகாரத்திற்கு உட்படாத பகுதிகளில் வாழும் மக்களுக்கும் நடைபெறும் செயல்களுக்கும் இவை முட்டுக் கட்டையாக இராது.

கட்டற்ற மென்பொருளுக்கான பெரும்பாலான உரிமங்கள் பதிப்புரிமையினை அடிப்படியாகக் கொண்டு விளங்குகிறது. மேலும் எவ்வகைப்பட்டத் தேவைகள் பதிப்புரிமை மூலம் சுமத்தப் படலாம் என்பதில் வரையறைகள் உண்டு. மேற்கூறப்பட்ட படி பதிப்புரிமைச் சார்ந்த உரிமம் ஒன்று கட்டற்றத் தன்மையினை மதித்தொழுகுகின்ற பட்சத்தில், எதிர்பாராத வேறு வகையான பிரச்சனைகள் வருவது அரிது. இங்ஙனம் சில சமயங்களில் நிகழ்ந்ததுண்டு. ஆனால் சிலக் கட்டற்ற மென்பொருள் உரிமங்கள் ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டவை. இத்தகைய ஒப்பந்தங்கள் மேற்கொண்டு பலவகைப் பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அதாவது இத்தகைய உரிமம் ஏற்கப் படத்தகாத கட்டுடையவைகளாக இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

இங்ஙனம் எப்பொழுது நிகழும் என்பதை சுட்டுவது கடினமே! ஒரு உடன்படிக்கையினை அடிப்படையாகக் கொண்ட உரிமமானது பயனரின் சுதந்தரத்தினைப் பதிப்புரிமைச் சட்டங்களுக்கும் அப்பாற்பட்டுக் கட்டுப் படுத்தினால் அதை கட்டற்றதாக கருத இயலாத சூழல் உருவாகும்.

கட்டற்ற மென்பொருட்களைப் பற்றி பேசுகிற போது “இலவசம்” போன்ற பதங்களைப் பிரயோகப் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை இவ்விஷயமனைத்தும் சுதந்தரத்தினை விடுத்து பைசா சம்பந்தப் பட்டது என்று கருத வைக்கிறது. “தனித்துவத்தினை” பிரதிபலிக்கும் கருத்துக்களை தாங்கள் ஏற்றொழுக மாட்டீர்கள் என நம்புகிறோம். குழப்பத்தினை விளைவிக்கக் கூடிய சொற்களையும் வாக்கியங்களையும் விவாதங்களில் தவிர்ப்பது நல்லது. கட்டற்ற மென்பொருளுக்கான மொழிபெயர்ப்புகளின் பட்டியலும் எங்களிடத்தே உள்ளன.

கட்டற்ற மென்பொருளுக்கான விளக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள நியதிகள் கவனத்துடன் பொருள் கொள்ளப் படவேண்டியவை. ஒரு மென்பொருளுக்கான உரிமம் கட்டற்ற மென்பொருளுக்கான உரிமத்தினை ஒத்து உள்ளதா என்பதை அதன் நோக்கங்கள் மட்டும் வாசகங்களைக் கொண்டு தீர்மானிக்கின்றோம். இந்நியதிகளில் உள்ள பிரச்சனைகளை முன்நோக்காதபோது கூட, மனசாட்சிக்கு விரோதமான கட்டுப்பாடுகளை ஒரு உரிமம் பெற்றிருக்குமாயின் நாம் அதனை நிராகரிக்கின்றோம். ஒரு உரிமத்தின் தேவைகள் சிலத் தருணங்களில் பலத்த சிந்தனைக்கு வழி வகுப்பதுண்டு. இச்சமயங்களில் இத்தேவைகள் ஏற்புடையவைதானா என்பது குறித்து முடிவு எடுப்பதற்கு முன் நாம் வழக்கறிஞர்களைக் கலந்தாலோசிக்கின்றோம். ஒரு புதிய பிரச்சனைக் குறித்து கருத்தொற்றுமை ஏற்படுகிறபோது இந்நியதிகளை புதுப்பிக்கின்றோம். இது சில உரிமங்களைத் தகுதி பெற/ இழக்கச் செய்வதில் உறுதுணையாக இருக்கின்றது.

ஒரு குறிப்பிட்ட உரிமம் கட்டற்ற மென்பொருளுக்கான உரிமத்தினை தழுவி நிற்கிறதா எனச் சரி பார்க்க உரிமங்களின் பட்டியலை காணவும். தாங்கள் தேடும் உரிமம் இப்பட்டியலில் காணக்கிடைக்கவில்லையெனில் <[email protected]> முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

தாங்கள் புதியதொரு உரிமத்தினை இயற்றுவது குறித்து தீவிரமாக சிந்தித்து வந்தால், மேற்கூறிய முகவரியில் க.மெ.அ வினைத் தொடர்புக் கொள்ளவும். பலப்பல கட்டற்ற மென்பொருள் உரிமங்கள் ஈசலெனப் பெருகுவது பயனர்களுக்கு அவற்றைப் புரிந்து கொள்வதில் அதிக சிரமத்தினை ஏற்படுத்துவதாகும். தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய கட்டற்ற மென்பொருள் உரிமம் ஒன்றினை எங்களால் பரிந்துரைக்க இயலும்.

இவை எல்லாவற்றையும் மீறித் தங்களுக்கு புதியதொரு உரிமம்தான் வேண்டும் என்றால் எங்களின் உதவியுடன், பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்த்து தங்களின் உரிமம் கட்டற்ற மென்பொருள் உரிமமாகத் திகழ்வதை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

மென்பொருளுக்கும் அப்பால்

எக்காரணங்களுகாக மென்பொருட்கள் கட்டற்று இருக்க வேண்டுமோ அதே காரணங்களுக்காக மென்பொருட்களின் ஆவணங்களும் கட்டற்று விளங்க வேண்டும். ஏனெனில் ஆவணங்கள் மென்பொருளின் அங்கமாகத் திகழ்பவை.

நடைமுறைக்கு ஏற்ற கல்வி முதலிய வேலைப் பாடுகளைப் பிரதிபலிக்கின்ற ஏனைய செயல்களுக்கும் இவ்வாதங்கள் பொருந்தும். விகிபீடியா இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

எந்தவொரு வேலையுமே கட்டற்று இருக்கலாம். கட்டற்ற மென்பொருளின் விளக்கத்தினைக் கட்டற்ற பண்பாட்டின் அனைத்து விதமான செயல்களுக்கும் விரிவு படுத்தி பொருத்திக் கொள்ளலாம்.

திறந்த மூலம்?

மற்றுமொரு குழு கட்டற்ற மென்பொருளோடு நெருங்கியதான “திறந்த மூலம்” (இவையிரண்டும் ஒன்றல்ல) என்ற பதத்தினைப் பிரயோகப் படுத்தத் துவங்கியுள்ளார்கள். நாம் “கட்டற்ற மென்பொருள்” என்ற பதத்தினையே ஊக்குவிக்கின்றோம். ஏனெனில் அது சுதந்தரத்தினைப் பிரதிபலிக்கிறது. விலையினை அல்ல. சிந்தனைச் சுதந்தரத்தினை சுட்டி நிற்கிறது. திறந்த என்ற பதம் ஒரு போதும் சுதந்தரத்தினைச் சுட்டாது.